உலகக் கால்பந்தின் உணர்வால் உத்வேகம் பெற்ற ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முயற்சியில் கோவை கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளி ஈடுபட்டது.
விளையாட்டின் மூலம் உலகம் ஒன்றுபடுவதை அடையாளப்படுத்தும் விதமாக, பிரம்மாண்டமான 10 அடி உயர கால்பந்து அமைப்பை சுற்றி, போட்டியில் பங்கேற்ற 48 நாடுகளின் கொடிகளைப் பெருமையுடன் ஏந்தியபடி நுற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
FIFA உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியை எதிர்நோக்கிய உற்சாகத்தோடு “இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள், போதைப்பொருட்களை அல்ல” என்று பெயரிடப்பட்ட இந்த பிரச்சாரத்தை, போதைப்பொருட்களுக்குப் பதிலாக ஆர்வம், நோக்கம் மற்றும் ஆரோக்கியமான முயற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக முன்னெடுத்தனர்.
மேலும் மாணவ, மாணவியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் தங்கள் வாழ்த்தைத் தெரிவித்தனர். விளையாட்டில் உயரிய நிலையை அடையத் தேவையான ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் உறுதிப்பாட்டைக் கொண்டாடினர்.
இந்த முன்னெடுப்பின் மூலம், மாணவர்களிடையே தன்னம்பிக்கை, குழுப்பணி, உடல் நலம் மற்றும் நேர்மறையான வாழ்க்கை தேர்வுகளை வளர்ப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக விளையாட்டைப் பள்ளி முன்னிலைப்படுத்தியது.
கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர், இளைஞர்களை அர்த்தமுள்ள இலக்குகளை நோக்கி வழிநடத்துவதன் முக்கியத்துவத்தையும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் அபாயங்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
