தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது: தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 59 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கால் நூற்றாண்டு காலம் எங்களுடன் இணைந்து, பல்வேறு பொறுப்புகளில் கட்சி பணியாற்றிய அவருக்கு குடியரசு துணைத் தலைவர் என்கிற மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்க இருப்பது அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல். சந்தோஷ் ஆகியோருக்கு எனது சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
1998-ம் ஆண்டு அதிமுக – பாஜக கூட்டணியில் கோவை மக்களவைத் தொகுதியில் வென்று திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன். பாஜக மாநில தலைவராக சிறப்பாக செயல்பட்ட அவர், கட்சித் தலைமை என்ன கட்டளை இடுகிறதோ அதை செய்து முடிப்பவர்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சிறப்பாக செயல்பட்டவருக்கு, பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழர், இனி டெல்லி செங்கோட்டையை அலங்கரிக்க இருக்கிறார்.
ஆர்.என். வெங்கட்ராமனுக்கு பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராகிறார். இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதம் அளிக்கும் செய்தியாகும். குடியரசு துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராகவும் பொறுப்பேற்க இருக்கும் எனது அருமை சகோதரர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 59 பேரும், குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
