79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு தொப்பம்பட்டியில் உள்ள ஆட்டோமோட்டிவ் டிவிசனில் இன்று நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணதாசன் ராமதாஸ், ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குனர் கவிதாசன், இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

இயக்குனர் கவிதாசன் பேசும்போது: அறிமுகமானவர்களுக்கு உதவும் போது நல்ல மனிதனாகிறோம், அறிமுகமே இல்லாதவர்களுக்கு உதவும் போது நாமே இறைவனாகிறோம் என்று பேசினார்.

இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம் பேசுகையில்: பணியாளர்கள் தாமாக முன்வந்து ரத்த தானம்  செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரத்த தானம் செய்வது உடல் உறுப்பு தானம் செய்வதற்கு சமமானது என்று குறிப்பிட்டார்.

டாக்டர் கண்ணதாசன் ராமதாஸ் கூறுகையில்: ரத்த தானம் உயிர் காக்கும் சிகிச்சைக்கு மிகவும் அவசியம். பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தம் மிகவும் அவசியமான ஒன்றாக அரசு மருத்துவமனைகளுக்கு இருக்கிறது எனக் கூறினார்.