சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சில ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில் (எண்: 16844), செப்டம்பர் 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாள்களில் புகழூர் – திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாள்களில் புகழூர் – திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030), செப்டம்பர் 13-ஆம் தேதி போத்தனூர் – மேட்டுப்பாளையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஷொரணூர் – கோவை ரயில் (எண்: 56604), செப்டம்பர் 18 மற்றும் 26 ஆகிய தேதிகளில் போத்தனூர் – கோவை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதே நாள்களில் கோவை – ஷொரணூர் ரயில் (எண்: 56603), கோவை – போத்தனூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.