கோவை, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை சார்பில், நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் தானியங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடந்தது.

12c 2 scaled

‘மாஸ்டரிங் மைக்ரோபயாலஜி ஆட்டோமேஷன்’ என்ற தலைப்பில் நடந்த பயிற்சியில், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் பங்கேற்றனர். தொற்று நோய்களை கண்டறியும் நவீன தொழில்நுட்பங்கள், ஆய்வக செயல்பாடுகளை மேம்படுத்தும் முறைகள் குறித்து இதில் விளக்கப்பட்டன.

12b 4 scaled

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும், நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் மாதேஸ்வரன் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி நடந்தது.

மருத்துவமனையின் தர கட்டுப்பாடு மற்றும் அங்கீகார பிரிவு துணை தலைவரும், ஆய்வக மருத்துவம் மற்றும் ரத்த வங்கியின் தலைவரும், தலைமை நுண்ணுயிரியலாளருமான டாக்டர் காந்திராஜ் வரவேற்றார். மருத்துவமனையில் நவீன நுண்ணுயிரியல் ஆய்வகத்தை உருவாக்கிய விதம், அதன் செயல்பாடுகள் குறித்து  விளக்கினார்.

ஆய்வக தர கட்டுப்பாடு மற்றும் அங்கீகாரம், ஆய்வக முடிவுகளை மருத்துவ சிகிச்சை முடிவுகளுடன் இணைத்தல், நோயறிதல் முறைகளை சரியாக பயன்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் நிபுணர்கள் பேசினர்.

பயோமெரியக்ஸ் நிறுவனத்தின் தெற்காசிய மருத்துவ விவகார பிரிவு இயக்குனர் டாக்டர் தேப்கிஷோர் குப்தா, நோயறிதல் முறைகளையும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைப்பது குறித்து விளக்கினார்.

தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சிவகுமார், அவசர சிகிச்சையில் விரைவான ஆய்வக முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொற்று நோய்கள் மற்றும் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் நவீன், ஒரே நேரத்தில் பல நோய்க்கிருமிகளைக் கண்டறியும் நவீன பரிசோதனை முறைகள் குறித்து விளக்கினார்.

பிற்பகல் அமர்வில், நோய்க்கிருமிகளை விரைவாகவும் துல்லியமாகவும் அடையாளம் காண உதவும் தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயோமெரியக்ஸ் நிறுவன மருத்துவ விவகார மேலாளர் சம்பத்குமார் மற்றும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர், மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி உள்ளிட்ட நவீன நோயறிதல் தொழில்நுட்பங்கள், தானியங்கி ஆய்வக செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

மேலும், தானியங்கி ஆய்வக கருவிகளின் செயல்பாடுகள், அவற்றுடன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முறைகள் குறித்து நேரடி செயல்விளக்கங்கள் நடத்தப்பட்டன.