தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களிலும், திமுக தொடர்புடைய சில இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சிவா டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான உற்பத்தி நிறுவனத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் நிறுவனத்தின் ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

அதேபோல், கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சி காலங்களில் வழங்கப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை, தனியார் மதுக்கூடங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள், காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறுதல், அட்டை பெட்டிகள், பாட்டில் மூடிகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்த விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பீளமேடு, நரசிம்மநாயக்கன்பாளையம், வாளையார், பொள்ளாச்சி மொத்தம் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதன் முழுமையான விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.