செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி மையமாக மாறும் நோக்கில், உலகின் முதல் முழுமையான ஏஐ நகரத்தை உருவாக்கும் திட்டத்தில் அபுதாபி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ‘அயன் சென்டியா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம், 2027-ஆம் ஆண்டுக்குள் முக்கிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யும் இலக்குடன் வடிவமைக்கப்படுகிறது.

இந்த நகரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான சேவைகள் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து, ஸ்மார்ட் குடியிருப்புகள், சாலைப் போக்குவரத்து கண்காணிப்பு, சுகாதார சேவைகள், எரிசக்தி மேலாண்மை உள்ளிட்ட பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.

இந்த மாபெரும் திட்டத்தை அபுதாபியைச் சேர்ந்த போல்ட் டெக்னாலஜிஸ் நிறுவனமும், இத்தாலியின் ரியல் எஸ்டேட் நிறுவனமான மி ஆன் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக அபுதாபி அரசு சுமார் 13 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

உலகின் ஏஐ தலைநகரமாக உருவாக வேண்டும் என்ற அபுதாபியின் இலக்கை முன்னெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு, ஓபன் ஏஐ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் முதலீட்டு ஆதரவு வழங்கி வருகின்றன.

இந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில் ‘மையா’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எரிசக்தி, கல்வி, சுகாதாரம், அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த ஒரே செயலி மூலம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்ப நகரமாக மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் புதுமை ஆராய்ச்சிக்கான மையமாகவும் ‘அயன் சென்டியா’ உருவாக்கப்படுகிறது. அபுதாபியில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு, இதே மாதிரியான ஏஐ நகரங்களை உலகின் பிற பகுதிகளிலும் உருவாக்கும் திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.