ஆவின் தயிர், நெய், வெண்ணெய், இனிப்புகள் உள்ளிட்ட 67 வகையான பால் பொருட்களின் விலை நாளை (அக்., 28) முதல் உயர்த்தப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், பால் விற்பனையுடன் பால்கோவா, நெய், வெண்ணெய், சாக்லேட், குல்பி உள்ளிட்ட 175க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகின்றன. ஆவின் சாக்லேட், பால் ரஸ்க் உள்ளிட்ட பொருட்களுக்கும் மக்களிடையே வரவேற்பு உள்ளது.

தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், 67 வகையான ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 500 மி.லி., ஆவின் நெய் விலை ரூ.365ல் இருந்து ரூ.400 ஆகவும், 500 மி.லி., தயிர் விலை ரூ.35ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராம் மைசூர்பா விலை ரூ.140ல் இருந்து ரூ.160 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 கிராம் குலாப்ஜாமுன் ரூ.115க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதர பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ரூ.95, ஆவின் மிக்சர் 200 கிராம் ரூ.110, மில்க் பேடா 100 கிராம் ரூ. 60, மோர் 100 மி.லி. 10 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.