இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்காக ‘வெற்றிப் படிகள் – தேர்வில் சிறக்க… வாழ்வில் சாதிக்க…’ என்ற தலைப்பிலான வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்தின.
இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர். இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெயா வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இணைத் தலைமைத் தொகுப்பாளர் திலகவதி, ஞான சஞ்சீவனம் குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
திலகவதி பேசுகையில்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்கான வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கும்போது கல்வி நிறுவனத்தின் தரம், நவீன தொழில்நுட்ப வசதிகள், ஆய்வகக் கட்டமைப்புகள், திறமையான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அச்சமின்மை, நல்ல நட்பு, தன்னம்பிக்கை ஆகியவையே வெற்றியின் நான்கு தூண்கள் எனப் பேசினார்.
ஞான சஞ்சீவனம் குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் பேசுகையில்: மாணவர்கள் தெளிவான இலக்கை நிர்ணயித்து, அதை அடையக் கடினமாக உழைக்க வேண்டும். தேர்வு குறித்த அச்சத்தைத் தவிர்த்து தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
