கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அகாடமி சார்பில், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் இன்சைட் நிகழ்ச்சியின் 15-வது பதிப்பு வியாழக்கிழமை தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் உயர் பொறுப்புகளில் உள்ள தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

8a 13 scaled

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சத்குரு பேசுகையில், உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய மனித அறிவு, தற்போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தவறான கண்ணோட்டங்களுக்குள் சிக்கிக்கொண்டு மனிதர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ளது. பல்வேறு பணிகளை இயந்திரங்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், மனிதர்கள் தங்களது எல்லைகளைக் கடந்து செயல்பட வேண்டும். தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சிந்தனையில் தங்களைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது.

உங்களுடைய செயல்பாடு தொழிலாக இருந்தாலும், கலை, இசை, விளையாட்டு, அரசியல் அல்லது ஆன்மீகமாக இருந்தாலும், உங்களது உள்நிலை மற்றும் செயல்திறனை எப்போதும் மிக உயர்ந்த நிலையில் வைத்திருப்பதே மிகவும் முக்கியம் எனப் பேசினார்.

8c 3 scaled

இந்தாண்டு நிகழ்ச்சியில் அதானி குழுமத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும், வட அமெரிக்கப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரியுமான சுதீப்தா பட்டாச்சார்யா, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி, ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அபிமன்யு முஞ்சால், மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் நிறுவனரும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் துணைத் தலைவருமான முருகவேல் ஜானகிராமன் ஆகியோர் வெவ்வேறு அமர்வுகளில் உரையாற்றினர்.

மேலும், எம்.கே. வென்ச்சர்ஸ் நிறுவனர் மது கேலா, அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், வில்வா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி க்ருத்திகா குமரன், மோக்லிக்ஸ் மற்றும் கிரெட்லிக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ராகுல் கார்க் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி தொழில்முனைவோரும் பங்கேற்று, தொழில்களை தொடங்குதல், நிறுவனங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் தலைமைத்துவம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.