குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். அந்த வகையில், இயற்கை எழில் கொஞ்சும் கோவை மலைப்பகுதிகளிலும், சிறிய குன்றுகளிலும் பழமையான முருகன் கோவில்கள் பல அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. திருமணத் தடை நீங்க, குழந்தைப் பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைக்க வேண்டி கோவையில் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய பழமையான முருகன் கோவில்களைப் பற்றிப் பார்க்கலாம்.

2d 1 scaled

திருமண வரம், குழந்தை பாக்கியம் தரும்

ரத்தினகிரி முருகன் கோவில்

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் ஸ்ரீ ரத்தினகிரி முருகன் கோவில் அமைந்துள்ளது. மருதாசலக் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமான், இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இயற்கையாக அமைந்த பாறைச் சூழலில் அமைந்துள்ள இக்கோவிலில், பாறையிலிருந்து தோன்றிய சுயம்பு விநாயகரும் தனிச்சிறப்புடன் காட்சியளிக்கிறார். இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. தற்போதைய கோவில் கட்டுமானம் 19ம் நூற்றாண்டில் (சுமார் 150-200 ஆண்டுகளுக்கு முன்பு) விரிவுபடுத்தப்பட்டுக் கட்டப்பட்டது.

இத்தலத்தில் முருகப்பெருமான் தனது மயில் வாகனத்தின் மீது நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடதுபுறம் நோக்கிய மயில் வாகனத்தில் காட்சிதரும் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலின் தனிச்சிறப்புகளில் ஒன்று ‘பூ பறித்தல்’ வழிபாடாகும். விரும்பிய வாழ்க்கைத் துணை அமைய வேண்டி, பக்தர்கள் பூக்களைக் கொண்டு வந்து தாங்களே மாலை தொடுத்து முருகப்பெருமானுக்குச் சமர்ப்பித்து வழிபாட்டால் மனதிற்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம்.

பழங்காலத்தில் மாட்டுப் பொங்கல் நாளில் திருமண உறவுமுறை கொண்ட மணமக்கள் இங்கு வந்து மலர்களைச் சமர்ப்பித்து, திருமண வாழ்வு சிறக்க வேண்டி வழிபடுவது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் அசுரன் ஒருவன் சிவபெருமானிடம் வரம் பெற்று தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தப்பியோடிய தேவேந்திரன் ரத்தினகிரி மலையை அடைந்தார். அப்போது முருகப்பெருமான் இந்திரனைத் தனது மயில் வாகனமாக மாற்றி அசுரனிடமிருந்து காப்பாற்றியதாகத் தல வரலாறு கூறுகிறது.

மேலும், குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்தில் விரதமிருந்து வழிபட்ட பெண் பக்தைக்கு முருகப்பெருமானே இடையன் உருவில் தோன்றி திருநீறு வழங்கி அருள்புரிந்ததாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், நோய் நொடிகள் அகலவும், பயம் நீங்கவும், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப செழிப்பு பெருகவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

2a 4 scaled

குறை தீர்க்கும் குருந்தமலை குழந்தை குமரன்

கோவை மாவட்டம், காரமடை அருகே இயற்கை எழில் சூழ்ந்த குருந்தமலையில் அமைந்துள்ளது குழந்தை வேலாயுத சுவாமி கோவில். சுமார் 750 ஆண்டுகள் பழமையான இக்கோவில், 16 ஏக்கர் பரப்பளவில் சோலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மலையில் குருந்த மரங்கள் அதிகம் இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும், அகத்தியருக்கு முருகப்பெருமான் குருவாக உபதேசித்த தலம் என்றும் கூறப்படுகிறது.

குழந்தை வடிவில் குமரன்

இத்தலத்தின் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி, பழனி முருகனைப் போன்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

தலத்தின் தீர்த்தச் சிறப்பு

மலையிலும், அடிவாரத்திலும் பல்வேறு சுனைகள் அமைந்துள்ளன. மயில் வடிவில் அமைந்துள்ள மயில் சுனை நீரே மூலவருக்கு திருமஞ்சனம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கருவறைக்குக் கீழ்ப்புறம் அமைந்துள்ள ஆறுமுகச் சுனை, முருகனின் திருப்பாதங்களை நனைக்கும் வகையில் அமைந்திருப்பது வியப்புக்குரிய சிறப்பாகும்.

சூரியனின் பொற்கதிர் தரிசனம்

இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனின் பொற்கதிர்கள் முருகனின் திருமேனி மீது விழும் அதிசயம் நிகழ்கிறது.

தவிட்டிலிருந்து மிளகான அதிசயம்

முன்னொரு காலத்தில் கொங்கு நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் சிலர் சேர நாட்டிலிருந்து மிளகு, இலவங்கம், கிராம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்களை வாங்கி, மூட்டைகளாகக் கட்டி மாடுகள் மீது ஏற்றிக்கொண்டு விற்பனைக்குச் சென்றனர். வழியில் குருந்தமலை அடிவாரத்தில் இரவு தங்கினர். அப்போது சிறுவன் வடிவில் வந்த முருகன், மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். சிறுவனை அலட்சியமாகக் கருதிய வணிகர்கள், அவை தவிட்டு மூட்டைகள் என்று கூறினர்.

மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது, அவை அனைத்தும் தவிட்டாக மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த வணிகர்கள், சிறுவனாக வந்தது முருகனே என்பதை உணர்ந்து மலையில் வீற்றிருக்கும் குமரனை மனமுருகி வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகன், மீண்டும் அந்த மூட்டைகளை மிளகு, இலவங்கம், கிராம்பு நிறைந்த மூட்டைகளாக மாற்றி அருளினார். இந்த அற்புத நிகழ்வுக்குப் பின்னரே குழந்தை வேலாயுத சுவாமியின் புகழ் மேலும் பரவியதாகத் தல வரலாறு கூறுகிறது.

2c 3 scaled

திருமணத் தடை நீக்கும் குமரன் குன்று முருகன்

கோவை மாவட்டம், அன்னூர் தாலுகாவில் உள்ள குமரன் குன்று பகுதியில் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இம்மலைக்கோவிலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

திருமணம் தாமதமாகும் ஆண்கள், பெண்கள், குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் வேண்டுவோர் இங்கு வந்து முருகனை வழிபடுவது வழக்கமாக உள்ளது. குடும்ப ஒற்றுமை, தம்பதியர் நல்லிணக்கம், சந்தான பாக்கியம், மன அமைதி, வாழ்க்கையில் தடைகள் நீங்குதல் போன்ற வேண்டுதல்களுடனும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

சித்திரை மாதத்தில் (ஏப்ரல் – மே) குறிப்பிட்ட நாட்களில் சூரியனின் பொற்கதிர்கள் முருகப்பெருமானின் பாதங்களில் விழுவது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.

கோவில் நுழைவாயிலைக் கடந்து சென்றதும் புலித்தோலில் அமர்ந்திருக்கும் புலிப்பாணி சித்தரைத் தரிசிக்கலாம். தொடர்ந்து விநாயகர், இடும்பன், கடம்பன், வைத்தீஸ்வரர், தாய்யாழ் நாயகி, நவக்கிரகங்கள், வீரபாகு, அருணகிரியார் ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. கொங்கு பாரம்பரியத்தைப் பின்பற்றி தீபஸ்தம்பம் கோவிலுக்கு வெளியேயும், கொடிமரம் உள்ளேயும் அமைக்கப்பட்டுள்ளது.

உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகள் நீங்கவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். ‘பூக்கேட்டல்’ எனப்படும் வழிபாட்டில் இரண்டு மலர்களை வைத்து, இறைவனின் அனுமதியாக ஒரு மலரைத் தேர்ந்தெடுத்து தங்கள் வேண்டுதலுக்கான வழிகாட்டுதலைப் பெறுகின்றனர்.

இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. சனி தோஷத்தின் தாக்கம் குறைய வேண்டி பக்தர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை 48 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். மேலும் வில்வம், வேம்பு, அரசு, காட்டுமல்லி, கரை என ஐந்து புனித மரங்கள் அமைந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பாகும்.

2j scaled

அனுமனின் தாகம் தீர்த்த அனுவாவி

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் தனிச்சிறப்பு, குருவாகிய முருகனும், சீடரான அகத்திய முனிவரும் ஒரே திருத்தலத்தில் அருள்பாலிப்பதாகும். மலை உச்சியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியப் பெருமான் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மலை அடிவாரத்தில் அகத்திய முனிவர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ராமாயண இதிகாசத்துடனும் தொடர்புடையது இத்திருத்தலம். சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற அனுமனுக்குத் தாகம் ஏற்பட்டபோது, அவர் முருகனை வேண்டியதாகவும், முருகன் தனது வேலால் மலையைக் குத்தி நீரூற்றை உருவாக்கி அனுமனின் தாகத்தைத் தீர்த்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. இதனால் இத்தலம் ‘அனுவாவி’ எனப் பெயர் பெற்றது. ‘அனு’ என்பது அனுமனையும், ‘வாவி’ என்பது நீர்நிலையையும் குறிக்கிறது.

இன்றும் இத்தலத்தில் வற்றாத புனித நீரூற்று இருப்பது சிறப்பம்சமாகும். கோடைக்காலத்திலும் வற்றாமல் சுரக்கும் இந்தத் தீர்த்தத்தைப் பருகினால் நோய் நொடிகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு விநாயகர், வீரபாகு, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் மற்றும் அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வழிபடுவதும், திருமணத் தடை உள்ளவர்கள் முருகனுக்குத் தாலி, ஆடை ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

2g scaled

ஐந்து முகமுடைய ஓதிமலை ஆண்டவர்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள இரும்பரை என்ற ஊரில் அமைந்துள்ள மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஓதிமலை ஆண்டவர் கோவில் ஆகும்.

முருகப்பெருமான் குடிகொண்டுள்ள மலைகளிலேயே உயரமானதாகக் கருதப்படும் இம்மலை, சுமார் 1,800 படிகளைக் கொண்ட செங்குத்தான மலைப்பாதையைக் கொண்டது.

இத்தலத்தின் தனிச்சிறப்பு, வேறெங்கும் காண்பதற்கு அரிதான ஐந்து திருமுகங்களும், எட்டுத் திருக்கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலமாகும்.

ஓதிமலை அடிவாரத்தில் சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார். மலைக்கோவிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதிகளுக்கு நடுவே சோமாஸ்கந்த அமைப்பில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இடும்பன், சப்தகன்னியர் சந்நிதிகளும் இங்கு உள்ளன. ஓதிமரம் இத்தலத்தின் விருட்சமாக விளங்குகிறது.

இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் தொடங்கவிருக்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறுமா என்பதை அறிய முருகப்பெருமானிடம் பூ வைத்து உத்தரவு கேட்கும் வழக்கம் உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு மலர்களைத் தனித்தனி இலைகளில் கட்டி சுவாமி முன் வைப்பார்கள். அவற்றில் ஒன்றை அர்ச்சகரோ அல்லது குழந்தைகளோ எடுத்துக் கொடுப்பார்கள். மனதில் நினைத்த காரியத்திற்கான உத்தரவாக இதைக் கருதி, அதன்பிறகே அச்செயலைத் தொடங்குவார்கள்.

கல்வி, கலைகளில் சிறந்து விளங்கவும், அறியாமல் செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கவும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு செய்து வழிபடுகின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியரை வழிபடுகின்றனர்.

2h scaled

முருகன் பாதம் பதிந்த பொன்மலை

கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் பழமை வாய்ந்த பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. சுமார் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில், முருகனின் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஞானப்பழத்திற்காக அம்மையப்பரிடம் கோபித்துக்கொண்டு பழநிக்குச் சென்ற பாலமுருகன், வழியில் இம்மலையில் தனது பாதங்களைப் பதித்ததாக தலவரலாறு கூறுகிறது. இதன் அடையாளமாக, மலைக்கோவிலில் வேலாயுத சுவாமியின் கருவறைக்குப் பின்புறம் முருகனின் பாதங்கள் அமைந்துள்ள சிறிய சன்னிதி உள்ளது. இங்கு மூலவருக்கு பூஜை செய்வதற்கு முன்பாக, முருகனின் பாதங்களுக்கே முதல் பூஜை நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இம்மலையில் உள்ள மூலிகைகளைக் கொண்டு மைசூர் திவானின் காலில் ஏற்பட்ட புண்ணை ஆற்றியதாகவும், இறைவனின் அருளால் குணமடைந்த திவான் இதனை மைசூர் அரசரிடம் எடுத்துரைத்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. இதையடுத்து மைசூர் அரசர் இத்தலத்தில் வேலாயுத சுவாமிக்கு கோவில் அமைத்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், உடலில் உள்ள நோய்கள் நீங்கவும் பக்தர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வேலாயுத சுவாமியை வேண்டிக்கொள்கின்றனர்.

2i scaled

நடுகல்லில் நின்றருளும் சாலையூர் பழநியாண்டவர்

கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தில் உள்ள சாலையூரில், சிறிய மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது பழநியாண்டவர் கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமை கொண்டதாகக் கருதப்படும் இத்தலம், நடுகல்லையே இறைவனாகப் போற்றி வழிபடும் தொன்மையான வழிபாட்டு மரபைக் கொண்டுள்ளது.

இத்தலத்தின் தனிச்சிறப்பு, பழநியாண்டவர் கல்வடிவில், நடுகல் போன்ற அமைப்பில் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதாகும். அந்தக் கல்லில் வேலின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில், எளிய கல் வடிவிலேயே முருகப்பெருமான் இங்கு காட்சி தருகிறார்.

மலை மீது உள்ள பழநியாண்டவரை பாண்டவர்களும், ஏராளமான சித்தர்களும் வழிபட்டதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இக்கோவிலின் முழுமையான தலவரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், தொன்மையான வழிபாட்டு மரபு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

தைப்பூசத் திருவிழாவின் ஏழாம் நாள் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு பழநியாண்டவரை வேண்டினால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனை செய்யலாம்.

எதிரிகள் தொல்லை நீங்க, கந்த சஷ்டி காலத்தில் நடைபெறும் சத்ரு சம்ஹார பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுகின்றனர். மூலவரின் அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால் சில பிணிகள் நீங்கும் என்பது இத்தல ஐதிகம்.

2 scaled

மனக்கவலை தீர்க்கும் சென்னாமலை பாலமுருகன்      

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிக்கதாசம்பாளையம் சென்னாமலையில் பழமையான ஸ்ரீ பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. பழநி முருகப்பெருமானைப் போலவே இத்தல பாலமுருகனும் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

பாலமுருகனைத் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகள் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், கிருத்திகை நாளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். முக்கியப் பண்டிகை நாட்களிலும் சிறப்பு வழிபாட்டிற்காகக் கோவில் திறக்கப்படுகிறது.

2f scaled

வேண்டிய வரம் அருளும் வட்டமலை ஆண்டவர்

கோவை மாவட்டம், அன்னூர் அருகே வட்டமலை ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. பழநி முருகனைப் போன்ற சிறிய திருமேனியுடன் முருகன் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முருகப்பெருமான் உயரமான இடத்தில் வீற்றிருந்து அருள்புரிவது வழக்கம். அதுபோலவே, இக்கோவிலிலும் பெரிய வட்ட வடிவிலான பாறையின் மீது கருவறையும் கோவிலும் அமைந்துள்ளன. மூலவரும் உயரமான இடத்தில் காட்சியளிப்பதால், வட்டமலை ஆண்டவர் என்ற திருநாமம் பெற்றார்.

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். குறிப்பாக, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தி வழிபட்டால் நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட திருமணங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மனதில் நினைத்த காரியம் நிறைவேறவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, கோவிலை மையமாகக் கொண்டே கிராமம் அமைந்திருப்பதுதான். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே நான்கு புறமும் தேர் செல்லும் வகையில் அகலமான வீதிகளுடன், சதுர வடிவில் இக்கிராமம் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.