வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ-கேஸ் ஆலை அனுமதியுடன் தான் கட்டப்படுகிறதா? வெளியானது ஆர்.டி.ஐ. தகவல்!
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட்டு வரும் பயோ-கேஸ் ஆலை தொடர்பான கட்டுமான பணிகளுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இதுவரை எந்தவொரு அனுமதி வேண்டி விண்ணப்பங்கள் வரவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ.) பெறப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ-கேஸ் தயாரிக்கும் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இப்பணிகளை துவக்கி வைத்தார்.
ஏற்கனவே வெள்ளலூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் சுற்றுசூழல் குப்பைக்கிடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் (காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு), அங்கு இதுபோல பயோ- கேஸ் தயாரிப்பதற்கான ஆலை, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலை போன்ற திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்த நிலையில், குப்பை கிடங்கில் பயோ-கேஸ் ஆலை கட்டுமான பணிகள் வழக்கம் போல நடைபெற்று வந்தன. 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு போன்ற ஒரு இடத்தில் இது போல ஒரு கட்டுமான பணியை மேற்கொள்வது விதிமீறல் ஆக கருதப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
இதற்கு பின்னர் ஏப்ரல் 2026ல் அமலுக்கு வந்த புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படியும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் முன்னர் ஒப்புதல்களையும், பழைய கழிவுகளை அகற்றியும் இருக்கவேண்டியது அவசியமாகிறது என்கின்றனர்.
இப்படியிருக்க சமீபத்தில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆலையின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், பணிகளை விரைவுபடுத்தி, திட்டமிட்ட கால அட்டவணையின்படி பணிகளை விரைந்து முடித்து, திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆலைக்கு உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து, ‘குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழு’ செயலாளர் கே.எஸ்.மோகன் இம்மாத துவக்கத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (கோவை தெற்கு) பொது தகவல் அலுவலரிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த ஆலை அமைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளதா, ஆலை அமைப்பதற்கான ஒப்புதல் மற்றும் இயக்குவதற்கான ஒப்புதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதா, என்பது உள்ளிட்ட சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இதற்கு கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரும் மற்றும் பொது தகவல் அலுவலர் தரப்பில் புதன்கிழமை பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆலைக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் கோரி இதுவரை விண்ணப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விண்ணப்பமே செய்யப்படாததால், அனுமதி வழங்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது தொடர்பான எந்த தகவலும் தங்களது அலுவலக ஆவணங்களில் இல்லை என அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் மாநகராட்சி நிர்வாகம் பயோ கேஸ் ஆலை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், மறுபுறம் சுற்றுச்சூழல் ரீதியாக மிக முக்கியமான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அடிப்படை ஒப்புதலுக்கு கூட விண்ணப்பிக்கப்படாமல் பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையேயும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
