துருக்கியில் நடைபெற்று வரும் 31-வது ஐ.நா. பருவநிலை மாநாட்டில், மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில், சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் உலகின் மிகப்பெரிய மண் ஓவியம் உருவாக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள ‘லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில்’, இங்கிலாந்த் நாட்டைச் சேர்ந்த மண் ஓவியக் கலைஞர் பில் லாம்பர்ட், நான்கு வகையான மண்ணைப் பயன்படுத்தி இந்த ஓவியத்தை உருவாக்கினார்.

இதற்கு முன்பு 59,458 சதுர சென்டிமீட்டர் (சுமார் 64 சதுர அடி) பரப்பளவில் உருவாக்கப்பட்ட மண் ஓவியமே உலக சாதனையாக இருந்தது. தற்போது 61,000 சதுர சென்டிமீட்டர் (சுமார் 65 சதுர அடி) பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ஓவியம் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த “அஃபிசியல் ரெக்கார்ட் பிரேக்கர்ஸ்’ என்ற அமைப்பு இந்தச் சாதனையை அதிகாரப்பூர்வமாகச் சரிபார்த்து உறுதி செய்தது.
மறுசுழற்சி செய்யப்பட்ட மரத்தால் உருவாக்கப்பட்ட சட்டகம் மற்றும் கேன்வாஸ் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நான்கு வகையான மண் இந்த ஓவியத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தளப் பதிவில், “பில், உங்களின் இந்த அற்புதமான முயற்சிக்கும், நமது மண்ணின் மீதான உங்களின் அக்கறைக்கும் என் வாழ்த்துக்கள். உலகின் மிகப்பெரிய மண் ஓவியம், உலகின் மிகப்பெரிய உயிர்வாழும் அமைப்பான நமது மண்ணின் இழந்த வளத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு நாட்டிற்கும் ஊக்கமளிப்பதாக அமையட்டும். இதனை நாம் நிகழச் செய்வோம். நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்.” எனக் கூறியுள்ளார்.

இந்த சாதனை குறித்து மண் ஓவியக் கலைஞர் பில் லாம்பர்ட் கூறுகையில், எனது வீட்டுத் தோட்டம், தாயாரின் இல்லம் மற்றும் ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் ஹட்டன் நிறுவனம் அளித்த நான்கு வகையான மண்ணை இதற்குப் பயன்படுத்தினேன். மரம், வேலியோரப் புதர்கள் மற்றும் வயல்வெளிகள் கொண்ட ஒரு காட்சியையே என் மனதில் நினைத்து இந்த ஓவியத்தை வரைந்தேன்.
விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் மண்ணுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் அதன் தேவைகளையும் ஆழமாகப் புரிந்து கொண்டேன். நமது சிறுவயதில் நடந்து சென்ற வயல்வெளிகளுக்கு இப்போது திரும்பிச் சென்று பார்த்தால், அங்கிருக்கும் மண்ணின் தடிமன் குறைந்து பாறைகள் வெளியே தெரிவதைக் கவனிக்க முடியும் என்றார்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பருவநிலை விஞ்ஞானி பேராசிரியர் மார்க் மாஸ்லின் கூறுகையில், ஆரோக்கியமான மண், நீர் வளத்தைச் சீராகப் பராமரிக்கிறது. கார்பனைத் தேக்கி வைக்கிறது. பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் உணவு உற்பத்திக்கும் தூணாகத் திகழ்கிறது. புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தி, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், ஒவ்வொரு நாட்டின் பருவநிலை செயல்திட்டத்திலும் மண்ணைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் முதன்மை இடம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
