அறுவடை காலத்தில் தரமான வெண்டைக்காய் கிலோ ரூ.25 வரை விற்பனையாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வெண்டைக்காய் உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. 2025-26ம் ஆண்டுக்கான மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் இரண்டாவது முன்மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும் சுமார் 5.75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டு, 79.34 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெண்டை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மாநிலத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 2.29 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆடிப்பட்டம், தைப்பட்டம் ஆகியவை வெண்டை சாகுபடிக்கு முக்கிய பருவங்களாக உள்ளன.
தற்போது திப்பம்பட்டி, அத்திக்கொம்பு, பார்ச்சலுார், அம்பிளிக்கை, மணப்பாறை, ஒட்டன்சத்திரம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெண்டைக்காய் வரத்து அதிகரித்து வருகிறது. அடர் பச்சை நிறத்திலும், பளபளப்பான தோற்றத்திலும் உள்ள வெண்டைக்காய்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவு பிரிவு, ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய விலைகளை ஆய்வு செய்துள்ளது. மேலும், வியாபாரிகளிடமும் கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடை காலத்தில் தரமான வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.25 வரை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அறுவடை நேரத்தில் மழை பெய்தால் அல்லது பிற மாநிலங்களில் இருந்து வெண்டைக்காய் வரத்து அதிகரித்தால் விலையில் மாற்றம் ஏற்படலாம். எனவே, விவசாயிகள் சந்தை நிலவரத்தை கவனித்து, விற்பனை தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
