தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி சார்பில், இதுவரை 857 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சேகரமாகும் குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு, தீபாவளிப் பண்டிகையையொட்டி, மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில், சாலை ஓரங்கள் மற்றும் இதர பகுதிகளிலுள்ள பட்டாசு குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணியானது, நேற்று (நவம்பர் 9) காலை முதல் தூய்மை பணியாளர்களைக் கொண்டு, நடைபெற்று வந்தன.
அந்த வகையில், 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில், இதுவரை, சுமார் 106 டன் பட்டாசு கழிவுகள் என மொத்தம் 857 டன் இன்று (பிற்பகல் 1 மணி நிலவரப்படி) குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியில், காலை முதல் சுமார் 1,862 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், லாரி, இலகுரக வாகனங்கள் உள்ளிட்ட 371 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தூய்மைப் பணியானது இன்று மாலைக்குள் முடியும் வகையில் திட்டமிடப்பட்டு தூய்மைப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
