தமிழ்நாட்டில் திரைப்பட நடிகராக இருந்து தமிழக முதலமைச்சர் ஆனவர்கள் 4 பேர். எம்.ஜி.ஆர்., ஜானகி ராமசந்திரன் (எம்.ஜி.ஆரின் மனைவி), ஜெயலலிதா மற்றும் விஜய்.
இவர்களை தவிர விஜயகாந்த் மட்டுமே திரைத்துறையில் இருந்து வந்து அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவர் எதிர்பார்த்த நாற்காலி அவரிடம் அகப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பின் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் சென்றுள்ளது.
விஜய்யின் சாதனையை கண்டு ‘கோலிவுட்’ உச்ச நட்சத்திரங்களாக உள்ள பலருக்கும் அந்த நாற்காலி ஆசை வந்துள்ளது. “மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்” என்ற வாக்கியத்தை கொஞ்சம் கூட மாறாமல், மேடைபோட்டு சொல்ல துவங்கிவிட்டனர்.
நடிகர் தனுஷின் சமீப கால செயல்பாடுகள் எல்லாமே, அவரின் இப்படிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. ரசிகர் மன்றத்தை மறுசீரமைத்து இயக்கமாக மாற்றினார். இயக்கம் சார்பில் சமூக நலப்பணிகளை தீவிரமாக முன்னெடுக்க உறுப்பினர்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கத்தை பலப்படுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது, அவரின் அரசியல் கணக்கில் ஒன்றாக இருக்கலாம் எனவும் தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், அதிமுக தலைமை தரப்பில், தனுஷுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுவதாக தற்போது வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடிகரை விட்டுவிடக்கூடாது!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல தோல்விகளை, அதிமுக தேர்தலில் சந்தித்துள்ளது. விஜயின் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என கணிக்கமுடியாமல் போனதால், 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் கடும் பாதிப்பு இருந்தது.
தனுஷ் அரசியலில் குதித்தால், இம்முறை அதிமுக பக்கம் அவரை கொண்டுவரலாம், அதனால் கட்சியில் இள ரத்தம் பாயும், அடுத்த தேர்தல்களில் கட்சி வெற்றியை நோக்கி செல்லும் என எடப்பாடி பழனிசாமி கணக்குபோடுவதாக கூறப்படுகிறது.
தனுஷ் இப்போது அரசியலுக்கு வந்தால், கட்சி கட்டமைப்பு என்றால் என்ன என்பதை ‘அ’வில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சூழல் இருக்கும். அதற்கு, அதிமுக உடன் இணைந்து நட்பு சக்தியாக பயணித்தால் அது இருவருக்குமே சாதகமான சூழலை ஏற்படுத்தும். எனவே இந்த விஷயங்களை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், தனுஷின் காதுகளில் போட்டுள்ளார். அவரும் இதை சாதகமான ஒன்றாகவே பார்ப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
2031 வரை தமிழக அரசியல் பரபரப்பாக இருக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை அரசியல்வாதிகளை தாண்டி, நடிகர்கள் செய்யப்போகிறார்கள் என்பது மட்டும் இப்போதைக்கு 100% உறுதி.
