சிற்பக் கலை சார்ந்த வீட்டு அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் சிலை (SILAII) நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொடக்க காலம் முதலே முக்கியப் பங்காற்றி வரும் 4 ஊழியர்களுக்கு, அந்நிறுவனம் சொகுசு மாடல் கார்களைப் பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பரிசுகளை வழங்கியது.

நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அதிகாரி ராகுல் கிஷன், சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் மிதுன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் நிஷாந்த், உற்பத்திப் பிரிவுத் தலைவர் சத்யா ஆகிய 4 பேருக்கும் கார்கள் வழங்கப்பட்டன. மேலும், ஊழியர்களின் குடும்பத்தினர் தங்களுக்குப் பிடித்த காரைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிலை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அருண் டைட்டன் கூறியதாவது: நான் ஒவ்வொரு நாளும் காரில் பாதுகாப்பாக வீடு திரும்புகிறேன். என்னுடன் இணைந்து சிலை நிறுவனத்தை உருவாக்கியவர்களும் தங்களது குடும்பத்தினருடன் அதே வசதியையும் பாதுகாப்பையும் பெற வேண்டும் என்று விரும்பினேன்.

நாங்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஊழியர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவிப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் கலைத்திறன் மிக்கவர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால், கலைஞர்களும் கைவினைக் கலைஞர்களும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் சூழலை ஏற்படுத்துவது அவசியம்.

தற்போது எங்கள் நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். எங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேர் பெண்கள். அவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பல பெண்களுக்கு எங்கள் நிறுவனம் முதல் வேலைவாய்ப்பை வழங்கியதுடன், தங்களது கலைத்திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிலை நிறுவனத்துடன் இணைந்து ஊழியர்களும் வளர வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.