ஞாயிறன்று சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் ரூ.13,000 கோடிக்கும் மேலான மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்வின்போது பிரதமர் முன்பு பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், கோவையின் வளர்ச்சிக்கான மூன்று திட்டங்களைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அதில் முதலாவதாக, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விதிகள் கூறும் படியான இருபது லட்சம் மக்கள்தொகை என்பது கோவையில் பழைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இல்லை என்பதால், இந்த மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும், இதனால் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவது கைவிடப்பட்டதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் முன்பு, கோவை நகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவது கோவை நகரையும் தாண்டி மேற்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கூறி, எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், பொருளாதார வளர்ச்சியை நினைவில் கொண்டும் இந்தத் திட்டத்தைக் கோவைக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக, கரூர்-கோவை வழித்தடத்தில் ஆறு வழிச்சாலை கொண்ட நெடுஞ்சாலையை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தத் திட்டம் கோவைக்கும் மேற்குத் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் கண்டிப்பாகத் தேவையான ஒன்றுதான்.

இந்தத் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கோவையைச் சேர்ந்த தொழில் துறை அமைப்புகள் பலமுறை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளன. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இருக்கக்கூடிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கரூர்-கோவை வழியே ஒரு புதிய நெடுஞ்சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், பலகாலமாக அது வேகம் எடுக்காமல் உள்ளது.

பிரதமர் முன்பு முதலமைச்சர் விஜய், இந்தத் திட்டமானது சரியான நேரத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டால் அது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என விளக்கினார்.

அதேபோல, கோவை-சென்னை வழித்தடத்தில் அதிவேக ரயில் பாதை வேண்டும், இது தொடர்பாக ஏற்கனவே இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பதையும் பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதலையும் நிதியையும் வழங்கிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்று தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பல திட்டங்கள் பற்றிப் பிரதமர் மோடியிடம் அவர் சென்னையில் நடந்த நிகழ்வில் பேசினார். கோரிக்கைகளைப் பற்றிப் பேசும்போது முதலமைச்சர் விஜய் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசியது சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது அரசியல் அரங்குகளிலும் பாராட்டைப் பெற்றது. முக்கியமாக, முன்னாள் இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விஜய் ஆங்கிலத்தில் தெளிவாகப் பேசியதைப் பாராட்டினார்.

முதலமைச்சர் விஜய் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் பற்றி ஆங்கிலத்தில் பிரதமரிடம் விளக்கிக் கொண்டிருந்தபோது, அதை உன்னிப்பாகப் பிரதமரும் கவனித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.