தமிழ் இலக்கியத்தில் ‘கையறுநிலை’ என்று ஓர் இலக்கிய வகை உண்டு. நமக்கு மிகவும் நெருக்கமானவர்களை இழக்கும்போது, அவர்களின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் மனநிலையே கையறுநிலை. இழந்தவரின் இடத்தை வேறொருவரால் நிரப்ப முடியாது; எந்தச் சூழலும் அந்த வெற்றிடத்தை ஈடுசெய்ய முடியாது. பிரிந்தவரை நினைத்து, துயரத்தின் உச்சத்தில் மனம் உருகிப் பாடும் பாடல்களைக் கையறுநிலை இலக்கியம் என்கிறோம்.

அத்தகையதொரு கையறுநிலை உணர்வைத்தான், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த புகழ் வணக்க நிகழ்வு, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் வெளிப்படுத்தியது.

ஒரு மனிதர் தமிழை நேசிப்பவராகவும், தமிழ் வாசிப்பாளராகவும், தமிழ் ஆர்வலராகவும், படைப்பாளராகவும், பேச்சாளராகவும், பட்டிமன்ற உலகின் ஜாம்பவானாகவும், பெரும் பேராசிரியராகவும், வயதில் மூத்த அறிஞராகவும் இருப்பதால் மட்டுமே இத்தகைய பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றுவிட முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது.

இத்தனை அடையாளங்களையும் கடந்து, மனிதர்களின் மனங்களில் அன்பை விதைக்கின்ற உயர்ந்த பண்பு ஒருவரிடம் இருக்கும்போதுதான் அவரது உயரம் காலத்தால் அழியாத உச்சத்தைத் தொடுகிறது. அத்தகைய பெருந்தகையாக வாழ்ந்தவர் சாலமன் பாப்பையா என்பதை அன்றைய நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது.

தொலைதூரங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களிலிருந்தும், இந்நிகழ்வைப் பற்றிக் கேள்விப்பட்டு, செவிவழிச் செய்தியறிந்து, அன்பின் உந்துதலால் ஓடிவந்தவர்கள் ஏராளம். சாதாரண மக்களிலிருந்து பெரும் வணிகப் பெருமக்கள் வரை பல்வேறு தரப்பினரையும் ஒரே இடத்தில் ஒன்றுகூடச் செய்த மையமாக அன்றைக்குத் திகழ்ந்தார் தமிழறிஞர் சாலமன் பாப்பையா.

ஒரு மனிதரின் மறைவுக்காக ஒட்டுமொத்தச் சமூகமும் இப்படித் துடிக்கிறது என்றால், அவர் அந்தச் சமூகத்தின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! அன்றைய அரங்கம், இந்தக் கேள்விக்கான விடையாகவே அமைந்திருந்தது.

சாலமன் பாப்பையா அவர்களின் மாணவராக ஹரிகோபாலன், ஊடகவியலாளராக மீரா நாகராஜன், எழுத்தாளராக எஸ். ராமகிருஷ்ணன், அவருடைய வளர்ப்புப் பிள்ளைகளாகப் பட்டிமன்றப் பேச்சாளர்கள்  ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் பகிர்ந்துகொண்ட நினைவுகள் ஒவ்வொன்றும் அங்கிருந்தவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்தன.

பொதுவாக, இவர்கள் மேடையில் பேசும்போது அரங்கம் கலகலக்கும்; நகைச்சுவை பொங்கும்; சிந்தனையைத் தூண்டும் கருத்துகள் செவிகளுக்கு விருந்தாகும். ஆனால், அன்று அவர்களின் சொற்களில் நகைச்சுவையைவிட நெகிழ்ச்சியும், வாதங்களை விட நினைவுகளும், சிரிப்பைவிடக் கண்ணீரும் அதிகமாக இருந்தன.

இன்றைய ஊடக உலகில் பல்வேறு போட்டிகள் உருவாகியுள்ளன. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ளது. தகவல்கள் கணநேரத்தில் பரவுகின்றன; கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இத்தகைய மாற்றங்களுக்கு மத்தியில், தமது தனித்துவமான பேச்சாற்றலாலும் ஆழமான அறிவாலும் உழைப்பாலும் தலைநிமிர்ந்து ஓர் இமயமாக விளங்கியவர் சாலமன் பாப்பையா.

அவரது பேச்சைக் கேட்பதற்காக மக்கள் கூடினார்கள். அவரது நகைச்சுவையில் மகிழ்ந்தார்கள். அவரது கருத்துகளிலிருந்து சிந்தனைகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால், அவர் மறைந்தபோது, அவர்களுக்குள் வெளிப்பட்டது அவரது பேச்சாற்றலுக்கான பாராட்டு மட்டுமல்ல; தங்கள் வாழ்வில் ஓர் அன்பான மனிதர் ஏற்படுத்தியிருந்த இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்ற தவிப்பும்தான்.

இதுவே ஒரு மனிதர் அடைந்த உண்மையான வெற்றி. புகழ் என்பது ஒருவர் வாழும்போது அவரைச் சூழ்ந்து நிற்கும் கூட்டத்தால் அளவிடப்படுவதில்லை; அவர் இல்லாதபோதும் அவரது நினைவால் நெகிழ்ந்து நிற்கும் இதயங்களால் அளவிடப்படுகிறது.

காலம் நகரும். புதிய பேச்சாளர்கள் வருவார்கள். புதிய மேடைகள் உருவாகும். தமிழ் தொடர்ந்து பயணிக்கும். ஆனால், சாலமன் பாப்பையா உருவாக்கிய தனித்துவமான இடத்தை அப்படியே நிரப்பிவிட முடியுமா என்ற கேள்வி எஞ்சியிருக்கும்.