பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகத் திறன் கொண்ட மரபின் மைந்தன் முத்தையா, சத்குருவைப் பற்றிய ‘சத்குரு – மாறும் யுகத்தின் முகம்’ என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். இது அவரது 80வது நூலாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக ஈஷா யோக மையத்துடன் தொடர்பில் இருந்து வரும் முத்தையா, 1997ல் சத்குருவின் வாழ்க்கை வரலாற்றை ‘உயிரென்னும் பூ மலரும்’ என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டார். சத்குரு குறித்து ஈஷா சார்பில் வெளியான முதல் நூல் இது. தொடர்ந்து சத்குருவின் பல்வேறு நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

தற்போது ‘சத்குரு – மாறும் யுகத்தின் முகம்’ என்ற தலைப்பில் 100 வெண்பாக்கள் அடங்கிய கவிதை நூலை எழுதியுள்ளார். இக்கவிதைகளுக்கு கனக தூரிகா உரை எழுதியுள்ளார். தமிழகத்தில் இந்நூல் வெளியிடப்பட்டபோது சத்குரு வெளிநாட்டில் இருந்தார்.

10 A 7 scaled

இந்நிலையில், மலேசியாவின் பத்துமலையில் அண்மையில் நடைபெற்ற சத்குருவின் மகா சத்சங்க நிகழ்ச்சியின்போது, நூலின் அறிமுகப் பிரதியை சத்குரு பெற்றுக்கொண்டார். மலேசிய மகாமாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தான்ஸ்ரீ நடராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் டத்தோ சிவக்குமார் ஆகியோரும் நூலின் அறிமுகப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

மண் காப்போம், காவேரி கூக்குரல், நதிகளை மீட்போம், பசுமைக்கரங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் சத்குரு உலக அளவில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பணிகளையும், மாறிவரும் காலச்சூழலில் சத்குருவின் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்நூலுக்கு ‘சத்குரு – மாறும் யுகத்தின் முகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மஸ்கட்டில் வசிக்கும் சசி, நூலின் முகப்புக்காக சத்குருவின் அழகிய ஓவியத்தை வரைந்துள்ளார். மேலும், கவிதைகளுக்கு ஏற்ற வகையில் சத்குருவின் பல்வேறு புகைப்படங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. நமது நம்பிக்கை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.