வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்காக கோவை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (அக். 10) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நிறைவடைந்த மாநிலங்களில், இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் அக்டோபர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 1,065 வாக்குச்சாவடி மையங்களிலும் அக். 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, அவற்றைப் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

எனவே, தகுதி பெற்ற இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.