சென்னையில் வரும் 10ம் தேதி ராகுல் காந்தி, இளைஞர்கள், மாணவர்களை சந்திக்கிறார்.

கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆழ்வா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதன் தொடர்ச்சியாக வரும் 10ம் தேதி சென்னையில் மாணவர்கள், இளைஞர்களை அவர் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு அரசியல் மேடையாக இருக்காது. வருங்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்கள், இளைஞர்களிடம் கருத்துகளை கேட்டு, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளிக்க உள்ளார்.

குறிப்பாக நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு, நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளிட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார். சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் இளைஞர்கள், மாணவர்களை வீதி, மாவட்டம், மாநிலம் என நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டு வரக்கூடிய ஒரே தலைவர் ராகுல் காந்தி என தான் கருதுவதாக நிவேதித் ஆழ்வா தெரிவித்தார்.