கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்காக ஐந்து மண்டல அலுவலகங்களில் கடந்த 7ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்ற வங்கி கடன் பெறும் லோக் கல்யாண் மேளா சிறப்பு முகாமில் 656 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் “லோக் கல்யாண் மேளா” சிறப்பு முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டது.

அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வங்கிகள் மூலம் ரூ.15,000 கடன் பெற ஏதுவாக, மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில், கிழக்கு மண்டலத்தில் 140 விண்ணப்பங்களும், மேற்கு மண்டலத்தில் 145 விண்ணப்பங்களும், தெற்கு மண்டலத்தில் 132 விண்ணப்பங்களும், வடக்கு மண்டலத்தில் 118 விண்ணப்பங்களும், மத்திய மண்டலத்தில் 121 விண்ணப்பங்களும் என மொத்தம் 656 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.