சேலம் மாவட்டம், காந்திநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் தனது பெற்றோர் வெங்கடேசன், நவமணி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த அக்., 26ல் சேலம் பட்டர்பிளை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அக்., 30ல் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோர், மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டன.

இதில் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், இதயம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

உடல் உறுப்புகளை உரிய நேரத்தில் மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகளை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். தங்களது மகனின் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த மணிகண்டனின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.