ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் நிகழ்ச்சியின் ஆறாவது பதிப்பு தொடக்க விழா நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், இயந்திரப் பொறியியல் துறைத் தலைவர் சரவணகுமார், மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறைத் தலைவர் சங்கீதா கலந்து கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, பெங்களூரு க்ரோ ஐடெக், ஸ்கிமேட்டிக் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் மற்றும் கல்லூரியின் இயந்திரப் பொறியியல் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் நிறுவனத்தின் நிறுவனர் சிவா கணேஷ் வெள்ளிங்கிரி, நிர்வாக இயக்குநர் பிரியா பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டியில் 22 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 23 அணிகள் இரண்டு பிரிவுகளில் போட்டியிடுகின்றன. நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்வில் மின்சார வாகன வடிவமைப்பு, தயாரிப்பு, செயல்திறன், பாதுகாப்பு, புதுமை மற்றும் நிலையான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களில் சவால்கள் மற்றும் மதிப்பீடுகள் நடைபெறுகின்றன.