கோவை கரும்புக்கடை பகுதியில் அமைந்துள்ள கிளாசிக் சிட்டி குடியிருப்புப் பகுதியில் போதுமான தெருவிளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அப்பகுதியில் புதிய தெருவிளக்குகளை அமைத்துத் தரக்கோரி கிளாசிக் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வ மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கிளாசிக் சிட்டி பகுதியில் தற்போது 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், எதிர்காலத்தில் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 250-க்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் தெருக்கள் முழுவதுமாக இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இரவு வேளையில் வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் நிலவும் இருளைப் பயன்படுத்தி சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்கள், திருட்டுச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என கூறிய அந்த நல சங்கத்தினர், பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் புதிய தெருவிளக்குகளை விரைந்து அமைத்துத் தர வேண்டும் தங்களின் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இவர்கள் தடையில்லா குடிநீர் வசதியை வழங்கவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தி கழிவுநீர் வசதிகள் மேம்படுத்தவும் மேயரிடம் மனு கொடுத்து, கோரிக்கை விடுத்தனர்.