2016 நவம்பர் மாதம் நடைபெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் காணாமல் போன ரூ.1000 நோட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற பின்பு அச்சிடப்பட்ட ரூ.1000 நோட்டை நீங்கள் பார்த்துளீர்களா?

காணாதவர்கள் இது போன்ற அரிய பண தாள்கள், அயல்நாட்டு பண தாள்கள், நாணயங்கள் போன்றவற்றை இளம் தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் காணுவகையில் கோவையில் நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை துவங்கி நடைபெற்றுவருகிறது.

கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ வெங்கட லக்ஷ்மி கல்யாண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இக்கண்காட்சியில், 35 சிறு அரங்கங்களில் பல்வேறு சிறப்பு மிக்க வரலாற்று நாணயங்கள், வெளிநாட்டு பணத்தாள்கள் மற்றும் அரிய வகை கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கால கலைப்பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 8 மணி வரை கண்காட்சியை காணலாம், அனுமதி இலவசம்.

இவர்களுக்கு பெருமைசேர்க்குமா தமிழக அரசு ?
நிகழ்வில் பங்கேற்றவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நாணயங்களை, பணத்தாள்களை ஆர்வத்துடனும் வியப்புடனும் பார்த்து சென்றனர்.
“மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரின் நினைவு நாணயங்கள் வெளிவந்துள்ளது. இவை ரூ.100 மதிப்பு கொண்ட நினைவு நாணயங்களாக உள்ளன. முக்கிய தலைவர்கள் பலரின் நினைவாக குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்கள் பொது பயன்பாட்டில் உள்ளது.”

“இந்த தருணத்தில், பாரதியார், வ.உ.சி, கொடிகாத்த குமரன், வேலுநாச்சியார், ராஜாஜி, கக்கண் போன்ற சான்றோர்களின் நினைவாக நாணயங்கள் வெளிவரவேண்டும். அவற்றை சட்டை பைகளில் தினமும் பெருமிதத்துடன் சுமந்த செல்ல தயாராக உள்ளோம்,” என கண்காட்சியை காண வந்த சிலர் கருத்து தெரிவித்தனர்.
வேலுநாச்சியார் இப்போதைய ஆளும் த.வெ.க. அரசின் கொள்கை தலைவர்களில் ஒருவர். எனவே வேலுநாச்சியார் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழக அரசு அவரின் நினைவாக நாணயங்கள் வெளியிட மத்திய அரசிடம் பேசுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகிறது.

