கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று மாபெரும் கல்விக் கடன் முகாமை நடத்தியது.
இந்த முகாமை தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தொடக்கி வைத்து, முதற்கட்டமாக 45 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10.26 கோடி மதிப்பிலான கல்விக் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர் சந்திரமோகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பொருளாதார நெருக்கடியால் மாணவர்களின் உயர்கல்வி கனவு தடைபட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில், 20-க்கும் மேற்பட்ட முன்னணி வங்கிகள் அரங்கம் அமைத்து மாணவர்களுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கின.
கடந்த ஆண்டில் 98% மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வியில் சேர்ந்து கோவை மாவட்டம் சாதனை படைத்ததை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இக்கல்வியாண்டில் பட்டப்படிப்பு, தொழில்முறைக் கல்வி மற்றும் வெளிநாட்டுப் படிப்புகளுக்கு மாணவர்கள் பி.எம் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் எளிய முறையில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தனர்.
உயர்கல்வி கற்காத மாணவர்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்குவோம் – அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், தான் +2 முடித்துவிட்டு தனக்கு பிடித்த கல்லூரி ஒன்றில் சேர எதிர்கொண்ட சிரமங்களையும், பண நெருக்கடியையும் பற்றி மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார். பிடித்த கல்லூரியில் படிக்க முடியவில்லை, கிடைத்த கல்லூரியில் தான் படித்தேன். முன்பெல்லாம் விரும்பிய கல்லூரிகளில் படிப்பது என்பது சவாலான ஒன்றாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர் படிப்பு என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அதை உணர்ந்து படிப்பது அவசியம் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இன்று கல்லூரி கற்க மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி கொள்ளவேண்டும் எனவும், போதைப் பழக்கங்கள் மற்றும் கேலி-கிண்டல் போன்ற தவறான வழிகளில் செல்லாமல் சிறந்த கல்வியைப் பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் உயர்கல்வி கற்காத மாணவர்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க அனைவரும் உழைக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
