கோவை பொள்ளாச்சி சாலை சிட்கோ தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சிறு குறு தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா, அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடி, அங்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்தனர்.

முன்னதாக சிட்கோ தொழில்பேட்டைக்குள் அமைச்சர் விக்னேஷ், மதன்ராஜா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் விக்னேஷ் இருசக்கர வாகனத்தை இயக்க மதன்ராஜா பின்னால் அமர்ந்து கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மதன்ராஜா பேசுகையில்: இங்குள்ள தொழில் நிறுவனங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி தேவைகள் பற்றி கேட்டு அறியப்பட்டுள்ளது. அவை அடுத்தடுத்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மூலப்பொருட்கள் விலை உயர்வு என்பது இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது அல்ல அது உலகளாவிய விஷயம். அண்மையில் நடந்த போர் காரணமாகவும் மூலப்பொருட்கள் விலை அதிகரித்தது.  மேலும் அது நிலையானது அல்ல. நிச்சயமாக மாறும். நிலை கட்டணம் குறைவு குறித்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண் தொழில் முனைவோர்கள், பெண் தொழிலாளர்களுக்காக 10 தொழில் பேட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொழுது அவர்களுடைய குடும்பங்கள் முன்னேறுகிறது. அந்த பகுதியில் இயங்கும் நிறுவனங்களும் வளர்ச்சியடைகிறது. தங்க நகை தொழில் பூங்கா கட்டுமான பணிகள் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே ஆய்வு செய்ய சென்றுள்ளதாக தெரிவித்தார்.

தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள 60 லட்சம் ரூபாய் போதாது என்று தொழில் துறையினர் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, அது குறித்து மீண்டும் ப்ரோபோசல் திறக்கப்பட்டுள்ளது. இதனை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

12b 3 scaled

இங்குள்ள சிட்கோ தொழில் பேட்டையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் பல்வேறு இடங்களில் பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. அதற்கான ஆய்வுகள் தான் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ், இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் தொழில்துறை சார்ந்த பிரச்சினை என்றால் அவர்களிடம் கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் கேட்பார்கள். அதிகாரிகள் கூறுவதை மீண்டும் தொழில் துறையினரிடம் கூறுவார்கள். நாங்கள் அடிப்படையிலிருந்து வந்ததால் நாங்களே ஒவ்வொரு விஷயங்களிலும் என்ன நடக்கிறது என்பதை களத்தில் இறங்கி ஆய்வு செய்வதாக குறிப்பிட்டார். அதனால்தான் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் விளக்கம் அளித்தார்.

மதுவிலக்கு துறையில் தவறு செய்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் பாரபட்சம் காட்டப்படாது. மேலும் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்க வேண்டும். சிலர் கடைநிலை தொழிலாளர்களிடம் மிரட்டி பணம் பறிப்பதற்காக வீடியோ எடுப்பதாக தொழிலாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வருகிறது.

உங்களுக்கு ஏதேனும் அழுத்தங்கள் வருகிறதா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, அது எனக்கு தெரியாது. ஆனால் நல்லது செய்கின்ற பொழுது சும்மா இருப்பவர்கள் அழுத்தங்கள் கொடுக்கத்தான் செய்வார்கள். முடிந்ததை அவர்கள் செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

திமுக ஆர்ப்பாட்டத்தின் பொழுது பலரும் முதல்வரை கடுமையாக விமர்சித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, அதனை வன்மையாக கண்டிப்பதாகவும், அதே சமயம் இதைப்பற்றி பேசுவதற்கு கட்சியிலிருந்து செய்தி தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பற்றி பேசுவார்கள் என்று தெரிவித்தார்.