உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில், பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற கூட்டம் கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய அரங்கில் நடைபெற்றது. இதில், பேரவைத் தலைவர் துரைசாமியின் பவள விழாவும், அவரைப் போற்றும் வகையில் சிறப்பு மலர் வெளியீடும் நடைபெற்றது.
கூட்டத்துக்கு உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத் தலைவர் மற்றும் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். செயல் தலைவர் குமணராசன் தொடக்கவுரையாற்றினார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 60 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் அறிவிப்புகள் தமிழில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த சட்டம் இயற்ற வேண்டும். வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சங்ககிரி மலையில் 1,130 திருக்குறள்களையும் கல்வெட்டுகளாகப் பொறிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களின் பணிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வருக்கு அனுப்பி, அவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசும் போது: தற்போது தமிழ் வழியில் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனை அளிக்கிறது. தமிழ் வழிக் கல்வியைப் பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும், தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தொய்வு ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய முறையில் பரிசீலித்து, மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் பேசுகையில்: தமிழ்மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களை ஆவணப்படுத்திப் பதிவு செய்வது அவசியம் என்றார்.
