விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் சிலை ஊர்வலங்கள், காவல் துறை ஒப்புதல் அளித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அறிவுறுத்தியுள்ளார்.
விநாயகர் சிலை ஊர்வலங்களை ஒழுங்காக நடத்துவது தொடர்பாக சிலை அமைப்பாளர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஆட்சியர், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சிலை அமைப்பாளர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
சிலைகளை நிறுவுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேவையான அனுமதிகளை முன்கூட்டியே பெற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, களிமண் மற்றும் இயற்கையாக கரையக்கூடிய பொருள்களால் தயாரிக்கப்படும் சிலைகளையே பயன்படுத்த வேண்டும்.
மேலும், நீர்நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலைகள் நிறுவப்படும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்விளக்கு வச மற்றும் தீ விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒலிப்பெருக்கிகளின் பயன்பாடும் அரசின் விதிமுறைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக, சிலை ஊர்வலங்கள் காவல் துறை அனுமதித்துள்ள பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்.
அதேபோல், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு முன்பு அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகள் மாசுபடாத வகையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி சிலைகளை கரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
