கோவை, ஆனைகட்டியில் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வாரச்சந்தை திறக்கப்பட்டது.
ஆனைகட்டி பகுதி மக்களின் கடந்த 10 ஆண்டுகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான இடத்தை வாடகைக்கு எடுத்து வாரச்சந்தை செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாரச்சந்தையை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், ஆனைகட்டி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தவெக அரசு உறுதுணையாக இருக்கும். மேலும், மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த வாரச்சந்தை மூலம் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
