அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கோவை – ஷார்ஜா விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நாட்டின் கட்டமைப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் விமான சேவைகள் வழங்கப்படும் போதும், மிகவும் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் சிலர் கூறும்போது: அமெரிக்கா- ஈரான் மோதல் காரணமாக வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு பிளை துபாய், எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் குறைந்த அளவே விமானங்களை இயக்கி வருகின்றன. ஏர் பிரான்ஸ் நிறுவனம் துபாய் நாட்டுக்கு வழங்கி வரும் சேவைகளை செப்டம்பர் 8ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்கள், அபுதாபிக்கு வாரத்தில் 4 நாட்கள் நேரடி விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அபுதாபிக்கு இயக்கப்படும் விமானங்கள் குறித்த நேரத்தில் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஷார்ஜாவிற்கு இயக்கப்படும் விமானங்கள் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அங்கிருந்து வரும் விமானங்கள் காலதாமதமாக கோவைக்கு வருகின்றன.
வளைகுடா நாடுகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் நிலைமையை பொறுத்து பாதுகாப்பு உறுதி செய்த பின் மட்டுமே விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றன. போர் பதற்றம் உள்ள போதும் கோவை -ஷார்ஜா இடையே பயணிகள் எண்ணிக்கை வழக்கம் போல் உள்ளது.
எதிர்வரும் நாட்களில் சூழ்நிலையை பொறுத்து விமானங்கள் சேவையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. பயணிகள் விமான நிறுவனங்களிடம் கேட்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
