கார்ப்பரேட் ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ரியம் ஸ்போர்ட்ஸ் இணைந்து, பெட்ரோஸ்கி குரூப் ஆஃப் கம்பெனீஸ் வழங்கும் ‘இண்டிபெண்டன்ஸ் கிரிக்கெட் கப்’ கிரிக்கெட் போட்டிகள், கோவை நீலம்பூர் கார்த்திபுரத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.
அனைத்து போட்டிகளும் கார்த்திபுரம் டவுன்ஷிப் மைதானத்தில் நடைபெறுகின்றன. இப்போட்டிகளுக்கு கிர்டிலால்ஸ், அரோமா, ஏபிடி மாருதி, அகர்வால் ஸ்வீட் பேலஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, ரமணி கார்ஸ் மற்றும் இண்டஸ் நோவேட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆதரவு வழங்குகின்றன.
மொத்தம் 120 கிரிக்கெட் போட்டிகள், 10 ஓவர்கள் கொண்ட ஆட்டங்களாக நடத்தப்பட உள்ளன. பல்வேறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் போட்டிகள், செப் 6, 12, 13 ஆகிய தேதிகளில் நாக்-அவுட் முறையில் நடைபெறுகின்றன. தொடர்ந்து, காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி வரும் செப்., 20ம் தேதி நடைபெற உள்ளது.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ‘இண்டிபெண்டன்ஸ் சுழற்கோப்பை’ வழங்கப்பட உள்ளது. இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பையும், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் பரிசுக்கோப்பையும் வழங்கப்பட உள்ளன.
இளைஞர்களை விளையாட்டின் பக்கம் ஈர்த்து, போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்த்து, போதை இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இக்கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
