காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தற்போது இமயமலையிலும் வேகமாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இமயமலையின் சில உயரமான பகுதிகளில் சராசரியாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்திருப்பதாக இந்திய தொழில்நுட்பக் கழகம் காரக்பூர், மேற்கொண்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மாற்றம் தொடர்ந்தால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் சுமார் 100 கோடி மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இமயமலை உலகின் மிக முக்கியமான நீராதாரமாகக் கருதப்படுகிறது. ‘ஆசியாவின் நீர்க் கோபுரம்’ என்று அழைக்கப்படும் இந்த மலைத்தொடரில்தான் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகள் தோன்றுகின்றன. இந்த நதிகளும் அவற்றின் துணை நதிகளும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளன.
குடிநீர், விவசாயம், நீர்மின் உற்பத்தி, தொழில், மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த நதிகளைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. உலகிலேயே அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட கங்கை மற்றும் சிந்து சமவெளிப் பகுதிகளில் மட்டும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐஐடி காரக்பூரின் கடல், நதி, வளிமண்டலம் மற்றும் நில அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு கவலைக்கிடமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்மார்க், பகல்காம், பத்ர்வா போன்ற உயரமான மலைப்பகுதிகள், மற்ற பகுதிகளை விட மிகவும் வேகமாக வெப்பமடைந்து வருவதை உறுதி செய்துள்ளனர்.

ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் சராசரியாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை அதிக வேகத்தில் உயர்ந்து வருவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக இரவு நேரங்களில் நிலவும் கடுமையான குளிர் குறைந்து வருவதால், பனி மற்றும் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, பல ஆயிரம் ஆண்டுகளாக உருவாகிய பனிப்பாறைகள் வேகமாக சுருங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கலாம். ஆனால் நீண்ட காலத்தில் பனிப்பாறைகள் குறைந்து போனால், கோடிக்கணக்கான மக்களுக்கு நீரை வழங்கும் நதிகளின் இயல்பான ஓட்டமே பாதிக்கப்படும் அபாயம் உருவாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அதேநேரத்தில், பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு, பனிப்பாறை ஏரிகள் உடைதல் போன்ற இயற்கைப் பேரிடர்களின் அபாயமும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
