கடந்த மாதம் 19ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் பற்றி அறிக்கையையும், ஊழல் பட்டியலையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டால் திமுக-வினர் நிலைமை என்னாகும் என பேசினார்.
அதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிடுங்கள் என அவர்கள் முழக்கமிட்டனர். அவையில் திமுக கொந்தளித்தபோது, முதலமைச்சர் ஜோசப் விஜயே எழுந்து உரையாற்றினார்.
அப்போது அவர், “நீங்கள் ஆதாரம் கேட்கிறீர்கள். ஒரு வாரத்திற்கு முன்பு, மூன்று துறைகள் குறித்த விரிவான ஆய்வு அறிக்கைகள் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தெரிவித்தார். விரிவான ஆதாரங்களுடன் கூடிய அந்த அறிக்கைகள் என் மேஜையில் உள்ளன. அவற்றை திறக்க என்னை நிர்பந்திக்காதீர்கள்; சரியான நேரத்தில் அவற்றை நான் வெளியிடுவேன்,” என்று அவர் எச்சரித்தார். “எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும்” என்பது தனக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் நேரு, அவரின் சகோதரர் தொடர்பான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இந்த சோதனை கோவையிலும் நடைபெற்று வருகிறது.

ஒருவேளை அந்த 3 கோப்புகளில் ஒன்றில் நேரு பெயர் உள்ளதா என பேச்சுக்கள் எழுந்துள்ளது.
நேரு மீதான குற்றச்சாட்டு என்ன?
கடந்த திமுக ஆட்சியின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. அப்போது நகராட்சி நிர்வாகத்துறையில் மட்டும், 2500க்கும் மேற்பட்ட பணிநியமனங்களுக்கு ரூ.632 கோடி லஞ்சம் பெற்று நியமனம் நடந்ததாக அமலாக்க துறை குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களை அனுப்பி, வழக்கு பதிய தமிழக அரசை கேட்டுக்கொண்டது.
துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து, இப்போது நடவடிக்கை எடுத்துவருகிறது.
“நாங்கள் அஞ்சமாட்டோம்”
இந்த சோதனைக்கு திமுக-வின் தலைவர் ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். “மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது,” என கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

