தமிழகத்தில் வெங்காயத்தின் விலை வெளிச்சந்தையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.35க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச சூழ்நிலைகளால் எரிபொருள் செலவு அதிகரித்திருப்பது, அண்டை மாநிலங்களில் நிலவும் காலநிலை பாதிப்புகள், வெங்காயம் அதிகளவில் விளையும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு வரத்து குறைந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் அதன் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, தமிழக அரசு முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நகர்ப்புறங்களில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான கூட்டுறவு பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகள் வாயிலாக வெங்காயம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களை உள்ளடக்கிய 8,839 ரேஷன் கடைகளில், வரும் செப்டம்பர் 3ம் தேதி முதல் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

பொதுமக்களிடம் வரவேற்பு மற்றும் தேவை அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதலாக வெங்காயம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் தொடர்ந்து விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.