கோவையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

உலகத் தரத்திலான அலுவலகங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள், நவீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வக வசதிகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த டிஜிட்டல் நிதி மையம் உருவாக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் உலகளாவிய முதலீடுகளை கோவைக்கு ஈர்ப்பதற்கும், நிதிநுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

தொழில், தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்கனவே முன்னணி நகரமாக திகழும் கோயம்புத்தூர், இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் நிதி மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் கவனம் பெறும் தொழில்நுட்ப நகரமாகவும் மேலும் உயர்வடையும்.

கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான பொருளாதார வாய்ப்புகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புமிக்க திட்டத்தை கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் சார்பிலும், கோவை மக்களின் சார்பிலும் மனதார வரவேற்கிறேன்.

கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.