டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை சார்பில் ‘மின்-இயக்கம்’ சார்ந்த சிறப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது.
தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும், மின்-இயக்கம் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்களில் மாணவர்களின் நடைமுறை அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதும் இந்தச் சிறப்பு மையத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கமாகும்.

மின்சார வாகனங்கள், பேட்டரி அமைப்புகள், மின்னூட்டல் தொழில்நுட்பம், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் டிரைவ்கள் போன்ற துறைகளில் நேரடிப் பயிற்சி, தொழிற்பயிற்சி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த அனுபவத்தைப் பெறுவதற்கு இம்மையம் வழிவகுக்கும்.
ஈ-ராயிஸ் மோட்டார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் சதீஷ் ஸ்டானிஸ்லாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இம்மையத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மதுரா பழனிசாமி, தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரன், கல்லூரி முதல்வர் பிரபா, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறைத் தலைவர் பாண்டியன் மற்றும் பேராசிரியர் ரமாஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
