கோவை, அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், அண்ணா சிலை சந்திப்பு அருகே அமைக்கப்பட வேண்டிய ரேம்ப் பணி இன்னும் முழுமையடையாததால், உப்பிலிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது.

இந்த ரேம்ப் பயன்பாட்டுக்கு வந்தால்,  திருச்சி சாலை மற்றும் காந்திபுரம் பகுதிகளில் இருந்து அவினாசி சாலை நோக்கி செல்லும் பல வாகனங்கள், உப்பிலிபாளையம் பகுதிக்கு செல்லாமல் நேரடியாக அவினாசி சாலை நோக்கி செல்ல முடியும்.

ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் பீளமேடு அருகே ஏறும் ரேம்ப் உள்ளது. ஆனால், அண்ணா சிலை சந்திப்பு அருகே திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு ஏறும் ரேம்ப் இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2025ம் ஆண்டு மே 22ல் பிறப்பித்த உத்தரவில், மேம்பாலத்தின் அசல் வடிவமைப்பு மற்றும் வரைபடங்களில் மாற்றம் செய்யப்பட்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

அசல் திட்டத்தின்படி அமைக்க வேண்டிய தூண்கள் மாற்று இடங்களில் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த மாற்றம் தனியார் நலன்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அசல் வடிவமைப்பு மற்றும் வரைபடத்தின்படி ரேம்புக்கான தூண்களை அமைக்க வேண்டும் என்றும், மாற்றப்பட்ட இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்களை அகற்ற வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 24ல் மேல்முறையீடு செய்தது. ஆனால், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை. அரசு தாக்கல் செய்த மேல்முறையீடும் ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.