கோவை மருதமலை முருகன் கோவிலில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிலையை அமைக்க மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதமலையில் முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சிலை அமைப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த இடத்தை தேர்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, சிலை அமைப்பது தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோவில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 9 அன்று நடத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு, அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருதமலை மலை அடிவாரத்தில் உள்ள மொட்டை அடிக்கும் வளாகம் அருகே 184 அடி உயர முருகன் சிலையை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இதற்காக ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து சுமார் 2.5 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது.
சிலையை மட்டும் அமைப்பதற்கான செலவு சுமார் ரூ.110 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியின் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரி (நீதிமன்றத்துக்கு உதவும் சட்ட நிபுணர்) கடந்த ஆண்டு சிலை அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்திருந்தார்.
சிலை அமைப்பதற்கான இடம் மாற்றப்படுமா அல்லது வேறு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கோவில் நிர்வாகம் தற்போது எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அடுத்த விசாரணையின்போது, இது தொடர்பான விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
