கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி பொறியியல் துறை சார்ந்த மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன் பேசுகையில்: கல்லூரி வாழ்க்கை என்பது கல்வியைப் பெறுவதுடன் மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவரும் தங்களது தனித்திறன்களைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ளும் பயணம். மாணவர்கள் கற்றல், பரிசோதனை, குழுவாக செயல்படுதல் மற்றும் தன்னம்பிக்கையுடன் முன்னேறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்விற்கு கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர் நா. பழனிசாமி தலைமை தாங்கி பேசுகையில்: மாணவர்கள் தங்களது இலக்குகளை அடைய ஒழுக்கம், தொடர் முயற்சி, அறிவு, கடின உழைப்பு, சரியான அணுகுமுறை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக காக்னிசன்ட் நிறுவனத்தின் திறன் ஆட்சேர்ப்பு பிரிவு உதவி துணைத்தலைவர் சுமீத் நாயக்  கலந்து கொண்டு கூறுகையில்: தொழில்நுட்பத் திறன், தகவல் தொடர்புத் திறன், குழு ஒருங்கிணைப்பு, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப செயல்படும் திறன் மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவை இன்றைய தொழில்துறையில் முக்கியமானவை என்று தெரிவித்தார்.

வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் பேசியதாவது: சவால்களும் தோல்விகளும் ஏற்படுவது இயல்பானது. அவற்றிலிருந்து மீண்டு நம்பிக்கையுடன் முன்னேறுவதே வெற்றிக்கு வழிவகுக்கும். தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும், சமூகத்தையும் பொறுப்புடன் வழிநடத்தும் பண்பே உண்மையான தலைமைத்துவம் என எடுத்துரைத்தார்.

விழாவில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.