கோவை, வ.உ.சி. உயிரியல் மைதானம் பகுதியில் சர்வதேச தரத்தில்  நீச்சல் குளம் பொது நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீச்சல் குளமானது, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.  நீச்சல் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துவதற்காகவும், நீச்சல் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிதாக உலக தரத்துடன் கூடிய நீச்சல் குளம், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி பூங்காவின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.  50 மீட்டர் X 25 மீட்டர் என்ற பரப்பளவில் செயல்படுத்தபட உள்ளது.

நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இதனுடைய வழித்தட அகலம் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் 2.5 மீட்டர் அதாவது 8.2 அடி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் 10 பாதைகள் அமைக்கப்படுகின்றன.

மேலும், நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் தங்களுடைய உடைமைகளை வைத்துக்கொள்ள தனித்தனியாக பாதுகாப்பு பெட்டகமானது அமைக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச நீச்சல் குளத்தில் மோட்டார் ரூம் அமைக்கப்பட்டு அதில் 5 எண்ணிக்கையிலான 10 Hp மோட்டார் பொருத்தப்பட உள்ளது. 16 எண்ணிக்கையிலான ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தனித்தனியாக குளியலறை, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச நீச்சல் குளத்தின் ஆழமானது 10 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று, வ.உ.சி. மைதானம் பகுதியில், ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் (ரூ.2.32 கோடி பொதுநிதி மற்றும் ரூ.1.12 கோடி பாராளுமன்ற உறுப்பினர் நிதி) பொது நீச்சல் குளமானது அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளமானது 25 மீட்டர் X 13.50 மீட்டர் பரப்பளவில் செயல்படுத்தபட உள்ளது.

மேலும், இந்த நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் சுக்கரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 4 முதல் 6 மணி நேரத்திற்கு முழுமையான நீர் சுழற்சி செய்யப்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 5 பாதைகள் அமைக்கப்படுகின்றன.

நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் தங்களுடைய உடைமைகளை வைத்துக்கொள்ள தனித்தனியாக பாதுகாப்பு பெட்டகம், 5HP திறன் கொண்ட மூன்று எண்ணிக்கையிலான மோட்டார்கள், 10 எண்ணிக்கையிலான ஒளி விளக்குகள், நீச்சல் குளத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்காக தனித்தனியாக குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகளுடன் 4 அடி ஆழத்திற்கு பொது நீச்சல் குளமானது அமைக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.