ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ராகிங் எதிர்ப்புக் குழு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், ராகிங் எதிர்ப்பு வார விழா நடைபெற்றது.

நிறைவு விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை கலந்து கொண்டு பேசியதாவது: இந்த கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக ராகிங் தொடர்பான எந்த குற்றங்களும் நடக்கவில்லை என்பது பாராட்டுக்குரியது. ராகிங் எதிர்ப்பைப் போலவே மிகவும் முக்கியமானது போதைப்பொருளுக்கு எதிராக நாம் நிற்பது.

ஒவ்வொருவரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். கல்லூரியில் நீங்கள் படிக்கும்போது உங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறந்த முறையில் உருவாக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றது. மாணவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதள குற்றங்கள் மற்றும் போதைப் பொருளுக்கு நாம் முழுவதுமாக விலகி இருக்க வேண்டும் என்றார்.

ஒரு வார காலமாக ராகிங் விழிப்புணர்வை முன்னிறுத்தி நடத்தப்பட்ட குறும்படம் தயாரித்தல், முக ஓவியம் தீட்டுதல், ராகிங்கிற்கு எதிரான வாசகம் எழுதுதல், ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்வில், நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன், ராகிங் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.