கோவைக்கு ஆன்மிகம், கல்வி மற்றும் இயற்கை விரும்பி ஏராளமானோர் சுற்றுலா வருவதால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்திய அளவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதலிடத்தை பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தமிழகத்தை சுற்றுலாத்துறையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமாரும், கோவை மாவட்டத்தின் சிறப்புகளை நன்கு அறிந்தவர். கோவையில் சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவடைந்துள்ளதால் பணிகள் வேகமடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும்.
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடந்த ஆண்டை விட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கட்டுப்படுத்த காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வரின் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை வரும் ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மாவட்டத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன்.
கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் எழுந்துள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை அவையில் பதில் அளிக்க உள்ளதாகவும், முறையான விசாரணை மேற்கொண்டு அதற்கான பதில்கள் நிச்சயம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமே நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சிறந்த முறையில் அறிக்கை தயாரித்து, அனுமதி பெறும் வகையில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். அங்கு சாத்தியம் இல்லாத பட்சத்தில் மாற்று இடங்களும் பரிசீலிக்கப்படும்.
நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்கவும், மக்களை சந்திக்கவும், ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. அவரவர் பாணியில் செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால், தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தற்போது மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டுள்ளதால் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
