கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் பயிலும் மாணவன் அமுதன் மரணம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் எதனால் மாணவன் அமுதன் மீது 15-20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது என்பது பற்றி விசாரணை நடந்து வரும் சூழலில், உயிரிழந்த மாணவனின் பெற்றோர் தங்கள் மகன் போதைப்பொருள் புழக்கம் பற்றி புகார் தந்ததே இதற்கு காரணம் என செய்தியாளர்களிடம் கூறியதால் அது சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட தனியார் கல்லூரியின் முதல்வர் ஜெயா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கல்லூரி மாணவர் அமுதன் முதலில் எதனால் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என விளக்கினார்.
முதலாவதாக, சென்ற ஜூலை 21ம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில், விடுதியில் தங்கியிருந்த மாணவன் அமுதன் மற்றும் அவரின் சக துறை மாணவன் அஜீஷ் இருவரும் விடுதி வளாகத்திற்கு வெளியே சென்று வந்துள்ளனர். இதை விடுதி சமையல் துறை பணியாளர் மனோஜ் என்பவர் பார்த்து, இரவில் வெளியே நடமாடுவது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனோஜ் தாக்கப்பட்டதில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனோஜ் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விடுதி சமையல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படி நடந்தால் விடுதியில் தங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்பதால் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு இரு மாணவர்களிடமும் விசாரணை நடத்தியது.
விசாரணையில் மாணவர்கள் சமையல் பணியாளர் மனோஜை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து இரு மாணவர்களின் பெற்றோர்களும் நேரில் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் இது பற்றி விளக்கப்பட்டது. ஆய்வு அறிக்கையும் அவர்களிடம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜூலை 24ம் தேதி இரு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, ஜூலை 31ம் தேதி மாணவர்களின் பெற்றோர்கள் மீண்டும் கல்லூரி நிர்வாகத்தை அணுகி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனக் கூறி வாய்ப்பு கோரினர். கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததாலும், விடுதி ஊழியர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்ததாலும், ஆகஸ்ட் 11ம் தேதி மீண்டும் வந்து சந்திக்குமாறு கூறி பெற்றோர்களுடன் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மாலை, மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவர் அமுதன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. கல்லூரிப் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினர் அங்குச் சென்றடைந்த சிறிது நேரத்தில் மாணவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது என்று கல்லூரியின் முதல்வர் ஜெயா கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில், மாணவனை தாக்கியவர்கள் போதைப்பொருள் தொடர்பாக அவர் துப்பு கொடுத்தது காரணமாக தாக்கினர், என்ற குற்றச்சாட்டு பற்றியும் கல்லூரி முதல்வரிடமும், இழுக்கு நடவடிக்கை குழு பிரதிநிதிகள் முன்பு கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர்கள், மாணவர் உயிரிழப்பிற்கு போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் புகாரளித்ததே காரணம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தனர். சமையல்காரர் மனோஜை தாக்கிய குற்றத்திற்காக மட்டுமே, மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தனர்.
அமுதன் மரண சம்பவம் தொடர்பாக காவல்துறை கேட்டுக் கொண்டதன் பேரில், கல்லூரியில் பயிலும் 15 மாணவர்களின் விவரங்களை கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

