கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை வசூலிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2026-27ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்கான வரி மற்றும் கட்டணங்களை வசூலிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியின் பிரதான வருவாய் இனமான சொத்துவரியில், நடப்பு 2026-27ம் நிதியாண்டிற்கான நிலுவை கேட்பில் இதுவரை 10.38 சதவீதமும், நடப்பு கேட்பில் 33.74 சதவீதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வரை கோவை மாநகராட்சியில் மொத்தம் ரூ.161.55 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ.199.98 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் ரூ.38.43 கோடி கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2026-27ம் நிதியாண்டு முடிவுக்குள் 100 சதவீத வரிவசூல் இலக்கை எட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து, அனைத்து வேலை நாட்களிலும் வரிவசூல் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை உடனடியாக செலுத்தி, மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
