விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: ரம்ஜான் பண்டிகைக்கு அரசு சார்பில் அரிசி வழங்கப்படுவது போன்று, அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கும் அரசு உதவ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. சிறிய விநாயகர் சிலைகள் சுமார் 15 லட்சம் இடங்களில் வைக்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட அதிகமான சிலைகள் வைக்கப்படும். கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்.
அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான ஆட்சி வழங்கப்படும் என தமிழக அரசு பதவியேற்கும்போது தெரிவித்திருந்தது. அது நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பதை வரும் காலம்தான் பதில் சொல்லும்.
தமிழக அரசு இந்து மதத்திற்கு நேரடியாக இடையூறு செய்யவில்லை என்றாலும், கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுவது போன்ற தோற்றம் இருக்கிறது. அமைச்சர்கள், துணை முதல்வர் தங்களது கிறிஸ்தவ அடையாளத்தை பெருமையாக வெளிப்படுத்துவதாகவும், சபாநாயகர் பைபிள் படிப்பதாகவும் அவர் கூறினார்.
கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது வரவேற்கத்தக்கது. கோவில்களுக்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் தேவையில்லாமல் செல்போன்களில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்று, தமிழக அரசு சார்பில் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
