இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மோசடி பணத்தைப் பாதுகாப்பாக மாற்றுவதற்காக குற்றவாளிகள் கையாளும் புதிய வழிமுறையான ‘மணி மியூல்’ மோசடி தற்போது கவனம் பெற்றுள்ளது.
இந்த மோசடி முறையில், பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை இடைத்தரகர்களாக பயன்படுத்தி, சைபர் குற்றங்கள் மூலம் பறிக்கப்பட்ட பணம், பரிமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
சைபர் குற்றவாளிகள், தங்களது வங்கிக் கணக்குகளுக்கு பதிலாக மற்றவர்களின் கணக்குகளை பயன்படுத்துவதால், மோசடி தொடர்பான பணப்பரிமாற்றங்களில் சிக்கிக் கொள்பவர்கள் கணக்கு உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
இதனால், குற்றத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் தப்பித்தாலும், தங்களது வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்தவர்கள் சட்டரீதியான விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது. நாடு முழுவதும் இத்தகைய ‘மணி மியூல்’ வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல் பங்குகளிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 7,000 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சராசரியாக தினமும், 40 சதவீதம், கிரெடிட், டெபிட் கார்டுகள், கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் பணம் செலுத்தப்படுகிறது. மீதமுள்ள பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ரொக்கமாக நடைபெறுகின்றன.
டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு அந்தப் பணம் எப்படி வந்தது என்ற விபரம், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
சைபர் குற்ற விசாரணைகளில் சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் கண்டறியப்படும் போது, அந்தப் பணம் சென்ற வங்கி கணக்குகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் டீலர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழக பெட்ரோலியம் டீலர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் தொடர்புடைய ஒவ்வொரு பணத்தின் மூலத்தையும் பெட்ரோல் பங்க் டீலர்கள் கண்காணிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பாக டீலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையின் முழு விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக வழங்கி, உரிய விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சைபர் குற்ற வழக்குகளில் பெட்ரோல் பங்க் டீலர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தால், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
எனவே, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான சைபர் குற்ற விசாரணைகளில் பெட்ரோல் பங்க் டீலர்கள் மற்றும் பிற வணிகர்களிடம் எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும், எந்த சூழலில் வங்கிக் கணக்குகளை முடக்கலாம் என்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும்.
