2026-27 நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த திமுக தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே 2026-27 நிதியாண்டில் ரூ.48,696.32 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் எனவும், ரூ.1.79 லட்சம் கோடி கடன்பெறவும் அரசு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் த.வெ.க. தலைமையிலான அரசு அமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் மேல் சிறு,குறு, நடுத்தர தொழில்கள் நிறைந்த கோவை மாவட்டத்தின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது பற்றியும், கோவை மாநகரின் வளர்ச்சிக்கு அரசு இப்போது செய்யவேண்டியவை என்ன என்பதை பற்றியும் தொழில்துறையினரிடம் கேள்விகள் எழுப்பியுள்ளோம்.
இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) தரப்பில் கூறப்படுவது: வரும் புதன் வெளிவரும் 2026-27 பட்ஜட்டில் மின்சாரத்தில் நிலைக்கட்டணத்தை (ஃபிக்சட் டிமாணட் சார்ஜை) தமிழக அரசு திரும்பப்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வழங்கப்படும் மின் இணைப்புகளில் குறுந்தொழில் முனைவோர் பயன்படுத்தப்படும் 18 கிலோ வாட் கீழ் உள்ள மின் இணைப்புகளுக்கு ‘பவர் பேக்ட்டில்’ இருந்து விலக்கு அளிக்கப்பட்டது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டுள்ளது சரி செய்யப்படவேண்டும். தகுந்த மின் இணைப்பு பெற்ற தொழில் முனைவோர்களுக்கு மீண்டும் பவர் பேக்ட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என போசியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறினார்.
உற்பத்தி சார்ந்த குறுந்தொழில் முனைவோர்களுக்கான தொழில்பேட்டையை கோவையில் அரசு உருவாக்கிட வேண்டும்.
தொழில்துறையினர் பயன்படுத்தும் உற்பத்தி சார்ந்த மூலப் பொருட்களின் விலை நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடித்து வருவதால், குறு சிறு தொழில்கள் நிலையான விலையில் மூலப்பொருட்கள் பெறுவதற்கு தொழில் நகரமான கோவையிலும், பிற தொழில் சார்ந்த மாவட்டங்களில் தொழில்துறைக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் மூலப்பொருள் வங்கிகள் மூலம் பெற அவற்றை உருவாக்க வேண்டும்.
ஜாப் ஆர்டர்கள் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு 18 % ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவது குறுந்தொழில்களை முடக்குவதாக உள்ளது. எனவே குறுந்தொழில்களை பாதுகாக்க 5% ஜி.எஸ்.டி.யை மாற்றி அமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெட் கிரைண்டர்கள், மோட்டார் பம்பு செட்டுகள் நாடு எங்கும் உள்ள மக்களின் இல்லங்களில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடுத்தர மக்களால் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான வெட் கிரைண்டர், மோட்டார் பம்பு, கம்ப்ரஸர்களை 5% ஜிஎஸ்டிக்கு மாற்றிட தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ள வேண்டும்.
கோவையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் எந்த திட்டங்களை அறிவிக்கவேண்டும் என தொழில்துறையினரிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியது:
மேற்கு புறவழி சாலையின் முதல் கட்டம் நிறைவேறிய நிலையில், அதன் 2ம் கட்டம் என்ன ஆகும் என தெரியவில்லை. 2ம் கட்டத்திட்டத்தில், செல்லம்பாளையம் முதல் கணுவாய் வரை 12.10 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கவேண்டும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90% மேல் நிறைவேறியுள்ளது. திட்டத்திற்கு ரூ.350 கோடி சுமாராக தேவைப்படும். இதை பட்ஜெட்டில் ஒதுக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஜி.டி.நாயுடு மேம்பாலம் (அவிநாசி சாலை 10.1 கிலோமீட்டர் மேம்பாலம்) சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்றனர். இதற்கான மண் பரிசோதனை பல மாதங்கள் முன்னர் நடைபெற்றது. பின்னர் அவிநாசி சாலையில் அமையவுள்ள மெட்ரோ திட்டத்தால் மேம்பால நீட்டிப்பு சற்று இழுபறியாக இருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நீட்டிப்புக்கு தடையின்மை சான்றிதழ் வழங்கியது. இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல கோவை மாநகரின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை மற்றும் பில்லூர் அணை ஆகியவை தூர் வாரப்படாமல் உள்ளன. இதனால் மழைப்பொழிவு இருந்தாலும் நீரை தேக்கமுடியாத நிலை உள்ளது. சிறுவாணி அணையில் நீர் கசிவு ஏற்படுகிறது. பில்லூர் அணையின் உயரத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி வண்டல்மண் நிரம்பி உள்ளது. அணையின் நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த தூர் வாரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
